கவின் கொலை வழக்கு: பெண்ணின் உறவினர் ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன்

வழக்கு விசாரணை தாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
கவின் கொலை வழக்கு: பெண்ணின் உறவினர் ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன்
Published on: 

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ்(24), காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். கொலையான கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதிய நோக்கத்தோடு இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது.

கைது

இந்த வழக்கு தொடர்பாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர். பின்னர் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், எஸ்.ஐ.யுமான கிருஷ்ணகுமாரியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

குற்றப்பத்திரிக்கை ரத்து

முதலில் பாளையங்கோட்டை போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் கடந்த மாதம் 29-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உறவினர் ஜெயபால்

இதன்படி காவல்துறை அதிகாரிகளான சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோர் கவின் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும், குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, பெண்ணின் உறவினர் ஜெயபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஜெயபால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த குற்ற சம்பவத்தில் ஜெயபால் நேரடியாக பங்கேற்கவில்லை எனக் குறிப்பிட்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நிபந்தனை ஜாமீன்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந்தேதி ஜெயபால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஜெயபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். நிபந்தனை ஜாமீன் வழங்க ரூ.20 ஆயிரம் சொந்த பத்திரத்தில், இரு பிணையதாரர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வரும் ஜெயபால், கொலை நடந்த கிராமத்திற்கு செல்லவும், புகார்தாரரை தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, தினமும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜெயபாலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com