முதல்-அமைச்சர் விஜய்யுடன் கஜகஸ்தான் தூதர் சந்திப்பு

உலக நாடுகளின் தூதர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய்,கஜகஸ்தான் தூதர்
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று முக்கிய சர்வதேச பிரமுகர் ஒருவர் வருகை தந்தார். இந்தியாவிற்கான கஜகஸ்தான் தூதர் அஸமத் யெஸ்கரயேவ், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்தார்.

வரவேற்பு

பொன்னாடை போர்த்தி வரவேற்பு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு வந்த கஜகஸ்தான் தூதரை, முதல்-அமைச்சர் விஜய் இன்முகத்தோடு வரவேற்றார். இந்த சந்திப்பின் போது கஜகஸ்தான் தூதருக்கு முதல்-அமைச்சர் விஜய் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வர்த்தக முதலீடுகள்

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் கஜகஸ்தான் நாட்டின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை இருதரப்பிலும் மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இருதரப்பு உறவுகள்

இந்தியா மற்றும் கஜகஸ்தான் இடையேயான நட்புறவை, தமிழக அரசு வழியே மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தூதர்கள் வருகையால் சுறுசுறுப்படையும் தலைமை செயலகம் நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, அண்மையில் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய்யை, உலக நாடுகளின் தூதர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, கஜகஸ்தான் குடியரசு தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் யர்மெக் ஜட்மகம்பெடோவ், இந்தியாவிற்கான கசாத் இன்வெஸ்ட் பிரதிநிதிகள் டொமினிக் சின்னப்பன் மற்றும் நந்தகுமார் மனோகரன், பேங்க் சென்டர் கிரெடிட் ஜெ.எஸ்.சி.யின் நிர்வாக இயக்குநர் அஸ்காத் சுய்னிஷேவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com