

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 2 கார்களுக்கு இடையே சிக்கி மாமியார், மருமகள் பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, எதிர்பாராதவிதமாக அந்த இரு கார்களுக்கும் இடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் சிக்கிக் கொண்டனர்.
கார்களுக்கு இடையில் சிக்கிய ஸ்கூட்டர் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஸ்கூட்டரில் பயணித்த மருமகள் சாந்தி மற்றும் அவரது மாமியார் வீராயி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கு காரணமான கார்களின் ஓட்டுநர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.