

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லாம், மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் வியாபாரம் தொடர்பாக ரூ.15 லட்சம் பணத்துடன் கோவைக்கு வந்துள்ளார். அப்போது, போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர், அவரிடமிருந்த ரூ.15 லட்சம் பணத்தைப் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முகமது அஸ்லாம், போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவை மத்திய சிறைக் காவலர் பட்டுராஜா மற்றும் கோவையைச் சேர்ந்த த்ரீஸ் அகமது ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கேரள மீன் வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில், சிறைக் காவலர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.