சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சேலையூரில் பெண் கொலை வழக்கில் அவரது செல்போன் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் அவரிடம் வழிப்பறி செய்தபோது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் கொன்றது தெரிந்தது.
சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி
Published on

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம் தென் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 51). இவர், கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் மாயமானார். இதுபற்றி ஜூன் மாதம் 8-ந் தேதி அவரது மகள் ஏஞ்சல் (29), தனது தாய் மாயமானதாக சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான எஸ்தரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஜூன் மாதம் 19-ந் தேதி கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் எஸ்தர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் எஸ்தர் கழுத்தை நெரித்து கொலை சேய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இது தொடர்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் எஸ்தரின் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் எஸ்தரின் செல்போனை தற்போது வேறு ஒருவர் பயன்படுத்தி வருவது தெரிந்தது. எனவே அந்த செல்போனை பயன்படுத்தி வருபவர்தான் எஸ்தரை கொலை செய்திருப்பார் என சந்தேகித்த போலீசார், செல்போனை பயன்படுத்தி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், மதுரபாக்கம் பகுதியை சேர்ந்த லோகநாதன்(20) என்பவர் தான் தனக்கு அந்த செல்போனை விற்றதாக தெரிவித்தார்.

அதன்பேரில் லோகநாதனை தேடி வந்த போலீசார், அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு அருகே அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் லோகநாதன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று நான், குடித்துவிட்டு போதையில் எனது வீட்டுக்கு கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பகுதியில் எஸ்தர் தனியாக நின்று பூ பறித்துக் கொண்டிருந்தார். மது அருந்துவதற்கு என்னிடம் பணம் இல்லாததால் எஸ்தர் அருகில் சென்று அவர் கையில் வைத்திருந்த பையை பறிக்க முயற்சி செய்தேன்.

ஆனால் அவர் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலால் மிதித்து கொன்றேன். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கைப்பையில் இருந்த 700 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டேன். திருடிய செல்போனை வேறு ஒருவருக்கு விற்று அந்த பணத்தில் மது அருந்தினேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போன் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான லோகநாதனை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com