தண்ணீரின்றி வெறிச்சோடியது கொடிவேரி அணை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.
கொடிவேரி அணை
Published on

கோபிசெட்டிபாளையம்,

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், ஆங்காங்கே சிறிய அளவில் கொட்டும் தண்ணீரில் குளித்தனர். இதனால் நீண்ட நேரம் குளிக்காமல் அவர்கள் உடனடியாக வெளியேறினர். இதன் காரணமாக கொடிவேரி அணை கூட்டநெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா வந்தவர்கள் அணை வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட சுடச்சுட மீன்வருவல், மக்காச்சோளம் ஆகியவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளை பெற்றோர்கள் விளையாட வைத்து பொழுது போக்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com