கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல் நாளை மாலை நல்லடக்கம்

வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல் நாளை மாலை நல்லடக்கம்
Published on: 

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு (75) இன்று காலமானார்.

த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு

சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார்.

70 நாட்கள் தொடர் சிகிச்சை

அவ்வப்போது, வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டுவந்தது. 70 நாட்களாக தொடர் சிகிச்சையில் வி.எஸ்.பாபு இருந்து வந்தாலும், கடந்த 2 வாரங்களாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கின. அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடக்கோரி சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவும் இருந்தது.

காலமானார்

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வி.எஸ்.பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 75. 70 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று மதியம் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரம்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்-அமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நாளை நல்லடக்கம்

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் வீட்டில் போதிய வசதி இல்லாததால், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அருகில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடல் நாளை மாலை 4 மணி அளவில் பல்லவன் சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என வி.எஸ்.பாபு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

X