

சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார்.
70 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று மதியம் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.