கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு கும்கி யானை வரவழைப்பு


கோவை வெள்ளியங்கிரி கோவிலுக்கு கும்கி யானை வரவழைப்பு
x

பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

கோவை,

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது அதிகளவிலான பக்தர்கள் நாள்தோறும் மலையேற்றம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் உள்ள அன்னதான கூடத்திற்கு காட்டு யானைகள் உணவு தேடி அடிக்கடி வந்து செல்கின்றன.

கடந்த திங்கட்கிழமை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடை பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. படிக்கட்டு வழியாக இறங்கி வந்த யானை, இரும்பு தடுப்பினை தள்ளி விட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பக்தர்கள் கவனத்துடன் வெள்ளியங்கிரி மலையேற வருமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், கோவை வெள்ளியங்கிரி கோவிலில் காட்டு யானை அச்சுறுத்தி வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்காக டாப்சிலிப் முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டு யானை வந்தால் அதை வனப்பகுதிக்குள் விரட்ட நரசிம்மன் தயார் நிலையில் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை மேலும் ஒரு கும்கி யானை அழைத்து வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story