

சென்னை,
குழந்தைகளை கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த விஜய் - அபிராமி தம்பதிக்கு திருமணமாகி, 4 மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு அப்போது செயல்பாட்டில் இருந்த 'டிக்டாக்' செயலியில் பிரபலமாக இருந்த அபிராமிக்கு அந்த பகுதியை சேர்ந்த பிரியாணி கடையில் பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து திருமணம் தாண்டிய இந்த உறவுக்கு தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் அவர் விஷம் வைத்து கொலை செய்தார். பின்னர், மீனாட்சி சுந்தரத்துடன், கேரளா தப்பி செல்ல முயன்றபோது, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகளிர் கோர்ட்டு அபிராமி, மீனாட்சி சுந்தரம் இருவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறப்பு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக்கோரியும் அபிராமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அபிராமி தரப்பில், குற்றச் சம்பவத்தில் மனுதாரரை தொடர்புபடுத்த எந்த நேரடி ஆதாரமும் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "வழக்கில் முதல் சாட்சியான அபிராமியின் கணவர் அளித்த சாட்சியத்தில், குழந்தைகளுக்கு கொடுத்த பால் கசப்பாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். வழக்கு ஆதாரங்களை பார்க்கும்போது, தற்போதைய நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க தகுதியான வழக்கு இது அல்ல" எனக்கூறி, அபிராமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், பிரதான மேல்முறையீட்டு வழக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.