

மதுரை,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஆண் மற்றும் பெண் என 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 10 பேர் காயம் எதுவும் அடையவில்லை. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 15 பேர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மதுரைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்றார். அங்கு அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஆளுநருடன் தமிழக அமைச்சர் அன்பழகன், ஆட்சியர் வீரராகவராவ், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.