

சென்னை,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தவர் எல்.முருகன். இந்த நிலையில் எல்.முருகன், நேற்று தனது, மந்திரி பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பத வியில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பதவி விலகியது குறித்து, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "நானும், எல்.முருகனும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்மீது மரியாதை உண்டு. இருப்பினும், அவர் ஒருபோதும் தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் பாதுகாக்கவில்லை.
பா.ஜ.க.வினர் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள். பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் தமிழகம் ஒருபோதும் சாதகமாக பதிலளிக்காது என்பதால் எல்.முருகன் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கலாம். மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்” என்றார்.