நில அபகரிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்; 23-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஆண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் பினாமி பெயரில் இந்த சொத்தை அவர் வாங்க முயன்றாரா? என சென்னை, உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நில உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சார்பில் ஒருவர் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருகிற 23-ந்தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வக்கீல் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணைக்கு பிறகே வழக்கின் நிலை குறித்து விரிவாக கூற இயலும் என்று வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com