

சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய்லாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்த இடத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை 9.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை 3084 ஏக்கருக்கு விலக்கிக் கொண்டுள்ளது. இந்த தடை நீக்க ஆணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. மக்களின் நில உரிமை, குடியிருப்பு உரிமை இந்த உத்தரவு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா போன்ற சங்பரிவார் அமைப்புக்களின் நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் மீட்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்துகிறோம். அரசு கோவிலிலிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வதே கோவில் சொத்துக்களை சூறையாடுவதற்காக சங்பரிவார் தீட்டும் சதி திட்டம் தான் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது. தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலிலேயே உண்டியலை திருடிய கூட்டம் அதைப்பற்றி பேச மறுக்கிற கூட்டம் இப்போது இந்து பக்தர்களுக்கு அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு அரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த சக்திகள் மீண்டும் நீதிமன்றத்தின் மூலம் மக்களின் உரிமைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சங்பரிவார் அமைப்புக்கள் இதை எதிர்த்து நியாயமற்ற விமர்சனங்களை முன்வைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இதேபோல், மாநிலம் முழுவதும் இனாம் நில விவசாயிகளும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணையை முன்மாதிரியாகக் கொண்டு இனாம் நில பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.