மங்களூரு அருகே மண்சரிவு: நாகர்கோவிலுக்கு 14 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வழியாக நெல்லை சந்திப்புக்கு ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
நாகர்கோவில்,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பெய்து வரும் பலத்த மழையால் தண்டவாளம் அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மங்களூர் -உடுப்பி இடையே இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று இரவில் நெல்லைக்கு அந்த ரெயில் வந்து சேர வேண்டிய நிலையில், 5.30 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற ரெயில், நேற்று காலை 8.30 மணி அளவில் உடுப்பி பகுதியில் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டது.
இதனால் மாற்று பாதையில் இயக்கப்படுமா? அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரெயில்வே நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை. இதனால் பயணிகள், முதியோர், நோயாளிகள் அவதிப்பட்டனர். பின்னர் 7½ மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் அதே வழித்தடத்தில் மீண்டும் ரெயில் புறப்பட்டு இயக்கப்பட்டது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 3.50 மணிக்கு வர வேண்டிய ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வந்தடைந்தது. அந்த ரெயில் 14 மணி நேரம் தாமதமாக வந்ததால் தென்மாவட்ட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.






