கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: உயர்நிலைக் குழுவுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

2025 - 2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசுகையில்,

மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வித் துறையின் மூலம் 22.4.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மெட்ராஸ், மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு, மென்பொருள், மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினர் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயார் செய்து சமர்பித்தவுடன் ஒப்பந்தபுள்ளி தொடர்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

கல்லூரி பயிலும் மாணவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கிடவும், அவர்கள் உயர்கல்வி கட்டாயம் பயில்வதை உறுதி செய்திடவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார்.

தொழில் நுட்பத் திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025 - 2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சென்று சேர்த்திட அனைத்து அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை அர்பணிப்பு உணர்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com