

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (மால்), திரையரங்குகள் போன்றவற்றை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
அதே நேரத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பெரிய ஜவுளி நிறுவனங்கள் போன்ற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிக வளாகங்களுக்கு இணையான மிகப்பெரிய கடைகளை மீண்டும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நாளை (திங்கிட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வணிக வளாகத்தை போன்று பல்வேறு கடைகளில் விற்கும் பொருட்களை, தனித்தனி பிரிவுகள் கொண்டு விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இது கொரோனா பரவுவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது. எனவே சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வணிக வளாகம் போன்று பல்வேறு பொருட்களை தனித்தனி பிரிவுகளாக வைத்து விற்பனை செய்யும் மிகப் பெரிய கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சியின் இந்த உத்தரவு குறித்து சென்னை நகரின் வணிக தளங்களாக திகழும் தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ மூலம் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.