கோடை விடுமுறையின் கடைசி நாள்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கோடை விடுமுறையின் கடைசி நாள்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக சுற்றுலா வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சூரிய உதய காட்சியை காண கடற்கரையில் திரண்டிருந்தனர். ஆனால் மழைக்கான மேக மூட்டத்தால் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பகுதிகளில் காலையில் இருந்து கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com