ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அவலம்: சசிகலா

தீபாவளியன்று ஒரே நாளில் பல கொலைகள் நடந்தது அதிர்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அவலம்
Published on: 

சென்னை,

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அவலம்” ஆட்சிகள் மாறினாலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அவலநிலை நீடிக்கிறது என வி.கே.சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது – தீபாவளி அன்று ஒரே நாளில் 12 கொலைகள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வரும்வேளையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 12 கொலைகள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளதையே இச்சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் தாக்கப்பட்டதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை மிகவும் கண்டனத்திற்குரியது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற கொலை மற்றும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்சிகள் மாறினாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அவலநிலை நீடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டது. மேலும், அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்நிலையங்களில் எந்த கட்சியினரின் தலையீடும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் தன் சொந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் கூட காவல் நிலையங்களில் தலையிட அனுமதித்ததில்லை. காவல்துறையினர் சுதந்திரமாக தங்களது பணிகளை மேற்கொண்டனர். அம்மா அவர்களதுஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இதனை இன்றைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாத வகையில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் இதர குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அதிப்ல் பதிவிட்டுள்ளார்.

X