'த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது' - வானதி சீனிவாசன்

பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
'த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது' - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி காவல் துறையில் புகார் கொடுத்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இவ்வழக்கில் உயிரிழந்த இளைஞர், காவல் ஆய்வாளர் மீதும் குற்றச்சாட்டு வைத்திருப்பதாகக் கூறப்படுவதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று புகார் கொடுத்தும் அதனை அலட்சியமாகக் கருதியதன் விளைவாக ரவுடிகளால் ஓர் உயிர் பலியாக்கப்பட்டிருப்பது காவல்துறை, பொதுமக்களையும், சட்டம் ஒழுங்கையும் எந்த அளவிற்கு பாதுகாக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்சூழலில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்-அமைச்சர் விஜய் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தால் மக்கள் பிரச்சினைகளை விடுத்து 50 வருட பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்.

இப்படி தினந்தோறும் ரவுடிகளின் அட்டகாசமும், ஆயுதக் கலாச்சாரமும் மாநிலத்தில் பெருகிவரும் சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது கவலையளிக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. முன்பிருந்த ஆட்சியை விட த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல முதல்-அமைச்சர் அவர்களே..! முற்றிலும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com