பயணிகளை தவிக்கவிட்டு.. அரசு பஸ்சை நிறுத்தி திருமண விருந்து சாப்பிட்ட டிரைவர்-கண்டக்டர்..

ஆத்திரமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ராமநாதபுரத்தில் முக்கிய பஸ் நிறுத்தமான டி-பிளாக் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி பாரதிநகரில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
அரசு பஸ்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு அரசு சிறப்பு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா இந்த பஸ் நேற்று முன்தினம் மாலை பெரியபட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்தது.

விருந்து

இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் பயணித்தனர். இந்த அரசு பஸ்சில் டிரைவராக அஜித்குமார் என்பவரும், கண்டக்டராக வேல்முருகன் என்பவரும் பணியில் இருந்தனர். ராமநாதபுரத்திற்கு வரும் வழியில் தெற்கு புதுகுடியிருப்பு கிராமத்தில் பயணிகளுடன் பஸ்சை நிறுத்திவிட்டு. டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கு நடந்த திருமண விழாவிற்கு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ராமநாதபுரத்தில் முக்கிய பஸ் நிறுத்தமான டி-பிளாக் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி பாரதிநகரில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விசாரணை

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் தெய்வேந்திரன் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக காரைக்குடி பொதுமேலாளர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com