பாஜக-வை விட்டு வெளியேறி தேர்தலில் தனியாக போட்டியா? அண்ணாமலை பதில்
சிவகங்கை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“கமலஹாசன் நல்ல நடிகர். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாநிலங்களவையில் தனது பேச்சில் தவறான புரிதலுடன் தமிழைப் பற்றி பேசியது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நிர்மலா சீதாராமன் பேசியதை புரிந்து கொண்டு, கமலஹாசன் அடுத்த முறை மாநிலங்களவையில் வாய்ப்பு கிடைக்கும்போது திருத்தி பேசுவார் என்று நம்புகிறேன்.
புதிதாக அரசியலுக்கு வந்தவர்களுக்கு நாங்கள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறோம். ஓ. பன்னீர்செல்வத்தை யாரும் தனித்து விடவில்லை. தேர்தலுக்கு இன்னும் பல நாட்கள், மாதங்கள் உள்ளன. அவர் எங்களுடன்தான் உள்ளார். அவரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். கல்வியில் சிறந்த மாநிலம் என தமிழகத்தை கூற முடியாது. கற்பதில் தென் இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. கல்விக்கூடங்களின் அருகே கஞ்சா விற்கும் நிலைக்கு தி.மு.க. அரசு தள்ளியுள்ளது. தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. ‘இந்தி ஒரு விஷ கிருமி’ என கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு, வேலைப்பளு காரணமாக நாள்தோறும் கனிமொழி மாறி, மாறி பேசி வருகிறார்” என்றார்.
பாஜகவை விட்டு நீங்கள் தனியாக போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகிறதே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, என்னைப்பார்த்தால் அப்படியா தெரிகிறது. மாவட்ட தலைவர், மூத்த தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள். அன்போடு இங்கே இருக்கிறோம்” என்றார்.

