

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதித்துறை செயல்பாடுகள், நிதித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாக திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம் மற்றும் கணக்குகள், ஓய்வூதியம், உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவு தணிக்கை, துறை தணிக்கை மற்றும் நிறுவன தணிக்கை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடைகள், அவை செலவிடப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகள் பெறும் வசதியின் தற்போதைய நிலை குறித்தும், 8.5.2021 முதல் 28.7.2021 வரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டு, ரூ.305 கோடிக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட்டது குறித்தும் ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாட்டு நிலை, பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், சார்நிலை கருவூலங்களின் செயல்பாடுகள், அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
அரசின் வரவு - செலவு திட்ட நடவடிக்கைகளிலும், வரவு - செலவு திட்டம் (பட்ஜெட்) தயாரிப்பதிலும் நவீன வழிமுறைகளை கையாளுதல், எளிய மற்றும் பேச்சு வழக்கு மொழியில் குடிமக்களுக்கான வரவு-செலவு திட்டத்தை வெளியிடுதல் போன்ற புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேட்டறிந்த முதல்-அமைச்சர், ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் திட்ட தயாரிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.