ராஜினாமா குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக எல்.முருகன் தெரிவித்தார்.
ராஜினாமா குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - எல்.முருகன்
Published on: 

சென்னை,

முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

நாடாளுமன்ற தேர்தல்

”நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிப்பரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி பதவியில் இருந்தும் விலக பிரதமரிடம் அனுமதிக் கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன். எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக, அடிமட்டத்தில் இருந்து தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

அவதூறு கருத்துகள்

கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர், சமூக ஊடகங்கள் வாயிலாக தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாமல், வன்மையாக கண்டிக்கத்தக்கவை. இந்த கருத்துகள் அனைத்தும் எவ்வித ஆதாரமும் அற்றவை.

இத்தகைய கருத்துகளை பரப்புவது, எனது நற்பெயருக்கும், மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் அவதூறு செயலாகும். மேலும், இவை பிற தனிநபர்களையும் பாதிக்கக்கூடியவை. இது, தமிழ்நாட்டு மக்களிடையே தேவையற்ற அமைதியின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

நடவடிக்கை

எனவே, எனது ராஜினாமா தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அனைத்து உள்ளடக்கங்கள், பதிவுகள் மற்றும் பிரசுரங்களையும் உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

எனது நற்பெயருக்கும், மதிப்பிற்கும் கடுமையான களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காக பொது மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன். இதனை செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com