திம்பம் மலை பாதையில் மீண்டும் இரவில் உலா வந்த சிறுத்தை

ல திம்பம் பகுதியில் மற்றொரு இடத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி தடுப்பு சுவரின் பின்புற பகுதியில் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை கண்டார்
திம்பம் மலை பாதையில் மீண்டும் இரவில் உலா வந்த சிறுத்தை
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பாதை உள்ளது. குறிப்பாக 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தை இரவு நேரங்களில் சாலையோரம் வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில் இரவில் வாகன ஓட்டி ஒருவர் தனது காரில் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வளைவில் திரும்பிய போது ஒரு சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நடந்து சென்றது. திடீரென சிறுத்தை நடந்து சென்றதால் காரில் வந்த வாகன ஓட்டி காரை மெதுவாக இயக்கினார்.

அந்த சிறுத்தை எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் சாவகாசமாக திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையில் மெதுவாக நடந்து சென்றது. சிறுத்தையை பின்தொடர்ந்து அந்த வாகன ஓட்டியும் தனது காரை மெதுவாக இயக்கினார். அப்போது அந்த வாகன ஓட்டி சிறுத்தை நடமாட்டத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது தூரம் நடந்து சென்ற அந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

அதைத்தொடர்ந்து அந்த வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். இதைப் போல திம்பம் பகுதியில் மற்றொரு இடத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி தடுப்பு சுவரின் பின்புற பகுதியில் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை கண்டார். இதனால் இந்த வாகன ஓட்டி காரின் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தை எழுந்து பார்த்தது. தொடர்ந்து அந்த வாகன ஓட்டி விடாமல் ஹாரனை அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் அந்த சிறுத்தை எழுந்திருந்து அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com