அயோத்திதாச பண்டிதர் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்

முதல் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்த புரட்சியாளர் என சீமான் தெரிவித்தார்.
அயோத்திதாச பண்டிதர்  பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடப்பங்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை, சனாதன எதிர்ப்பு, தீண்டாமைக்கொடுமை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்த சமூகநீதிப்போராளி!

ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப்பெற்றிட தம் வாழ்வினையே ஒப்புவித்த இலட்சியவாதி!

'தமிழன்' எனும் இதழை நடத்தி பகுத்தறிவையும், சமத்துவத்தையும் போதித்து, இனமான உணர்வு ஊட்டிய பெருந்தமிழர்!

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டினை் தகர்த்தெறிய 'தமிழர்கள் இந்துக்கள் அல்லர்' என்பதை அறுதியிட்டு நிறுவிய பெருந்தகை!

'சென்னை ஐஸ் ஹவுஸ்' தொழிலாளர்களை திரட்டி ஆங்கிலேயே அரசின் கொடுமைக்கு எதிராக இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சியாளர்!

பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இல்லாதிருந்த தமிழர் மறையாம் திருக்குறளை, தன் குடும்ப சேமிப்பு ஓலைச்சுவடிகளிலிருந்து தேடி எடுத்து ஆங்கிலேய அதிகாரி எல்லிஸ் மூலம் அச்சு பதிப்பித்து, அடுத்த தலைமுறையிடம் கையளித்த தகைமையாளர்!

தமிழ் சித்த மருத்துவ மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாமேதை!

முருகக்கடவுள் வரலாறு, விபூதி ஆராய்ச்சி, நந்தன் சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நூல்களை இயற்றி அன்னை தமிழுக்கு அணிசேர்த்த தமிழ்ப்பேரறிஞர்!

தமிழர்களின் உண்மையானப் பெரியார்!

சமூக சீர்த்திருத்தங்களின் தந்தை!

பகுத்தறிவு பாட்டன் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com