மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியின் நினைவை போற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்

ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்போன்டெய்ன் கல்லறை தோட்டத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.
Anbumani Ramadoss,Nagappan
Published on

சென்னை,

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியின் நினைவை போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாகப்பன் படையாட்சி 117-ஆவது நினைவு நாள்!

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகியின் நினைவை போற்றுவோம்!

ஏசியாடிக் பதிவு சட்டம்

1906ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசு (தற்போது தென் ஆப்பிரிக்கா) அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புறுத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாக கூறிய மகாத்மா காந்தி, இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்பு விடுத்தார்.

உயிரிழந்தார்

அதை ஏற்று ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து போராடிய நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவர், விடுதலையான ஆறாம் நாள், ஜூலை 6-ஆம் தேதி உயிரிழந்தார்.

வீரமரணம்

சத்தியாகிரக போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் மகாத்மா காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களில் தமது மகன் சிறை சென்றதையும், தமது சகோதரர் இறந்ததையும் சுட்டிக்காட்டிய காந்தியடிகள், எனினும் நாகப்பன் படையாட்சியின் உயிரிழப்பு ஏற்படுத்திய வலியுடன் ஒப்பிடும்போது இவை பெரிதல்ல என்று கூறினார்.

நினைவிடம்

நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்த காந்தியடிகள், 1914ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் முன் தமது கடைசி நிகழ்ச்சியாக ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்போன்டெய்ன் கல்லறை தோட்டத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார்.

மரியாதை செய்தனர்

மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள நாகப்பன் படையாட்சியின் திருவுருவ சிலைக்கு இன்று பாமக பொதுச்செயலாளார் வடிவேல் இராவணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி உள்ளிட்ட பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நாகப்பன் படையாட்சியின் 117-ஆவது நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com