"வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர் வரலாறு குறித்து பூம்புகாரில் ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்கியது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
"வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுக நகரமாகவும் இருந்த காவிரிபூம்பட்டனம், பின், சுனாமியால் அழிந்ததாக கூறப்படுகிறது. இது, காவிரி கடலில் கலக்கும் இடம் என்பதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அங்கிருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள நாகப்பட்டினம், பிற்கால சோழர்களின் துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து, கிழக்காசிய நாடுகளுக்கான கப்பல்கள் இயக்கப்பட்டன. இந்த இரண்டு இடங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் ஆய்வு செய்து, தொல்லியல் சான்றுகளை சேகரிப்பதற்கான அனுமதியை, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'காபா' வழங்கி உள்ளது.

அதன்படி, கடலடி ஆய்வை துவக்கும் முன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இரண்டு ஊர்களுக்கும் இடையில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடலடியில் நிலம் மற்றும் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை கண்டறியும் கள ஆய்வை, தொல்லியல் துறை துவக்கி உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளத்தில், மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை பேராசிரியர் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கி உள்ளது. பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழர் வரலாறு குறித்து பூம்புகாரில் ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்கியது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்!

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!

அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com