

சென்னை,
ஆவடி மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 700-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் சுமார் 21 மையங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தனியார் கேட்டரிங் நிறுவனம் மூலம் தினமும் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உணவு சமைக்கப்பட்டு, அங்கிருந்து வாகனங்கள் மூலம் 21 மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பணியாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை தூய்மை பணியாளர்களுக்கு சாம்பார் மற்றும் வெள்ளை சாதம் வழங்கப்பட்டது. ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் பணியாற்றி வந்த சுமார் 50 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி இருந் ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மற்ற மையங்களில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களிடமும் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பல இடங்களில் பணியாளர்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்தினர்.
இதற்கிடையில், பருத்திப்பட்டு பகுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட வசந்தா (வயது 50), எமிலி (50), விஜய லட்சுமி (50), குமார் (40) ஆகிய 4 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் பணியாற்றிய மற்ற தூய்மை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா கூறுகையில், 'இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. ஒரு மையத்தில் சாம்பாரில் பல்லி இருந்தது தெரியவந்த உடனேயே மற்ற அனைத்து மையங்களிலும் அந்த உணவை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வில் தவறு உறுதியானால், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த நிலையில், ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்த விவகாரத்தில் உணவு வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீஹரி மீது ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.