லாட்டரி மார்ட்டினின் ரூ. 456 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
லாட்டரி மார்ட்டினின் ரூ. 456 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சி.பி.ஐ. வழக்குப்பதிவு

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009-2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக லாட்டரியை விற்பனை செய்ததன் மூலம் சிக்கிம் மாநில அரசுக்கு ரூ.910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

கேரள கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும், இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மார்ட்டின், அவரது மனைவியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸ், இவர்களது மகளும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியுமான டெய்ஸி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறை

பின்னர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த மான ரூ.910.29 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது. இதில் ரூ.456.84 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதை உறுதி செய்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட் டது.

இந்த உத்தரவை எதிர்த்து மார்ட்டின், லீமா ரோஸ், டெய்ஸி ஆதவ் அர்ஜுனா மற்றும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், தங்களது சொத்து முடக்கத்தை ரத்து செய்து, அந்த சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

6 வாரத்துக்குள் பதில்

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், இந்த வழக்குகளுக்கு அமலாக்கத்துறை 6 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்குகளின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com