தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும்கியாஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும் கியாஸ் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னை,
லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் 'பாட்லிங்' மையங்களுக்கு ஏற்றிச்செல்லும் பணியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு, 21 டன் எடை கொண்ட கியாஸ் ஏற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்தன. இது லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி, இந்த விதிமுறைகளை மாற்ற லாரி உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.
ஆனால், வேறுவழியின்றி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் தென்னிந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, கியாஸ் லோடு ஏற்றாமல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். இதனால் தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் சிலிண்டர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






