

சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இங்கு த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. பரிசீலனை முடிவில் த.வெ.க, தி.மு.க., அ.தி.மு.க. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது 20 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள் ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத் தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை, ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன்படி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் வக்கீல் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
13 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.