மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெளியூர்க்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற உத்தரவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வெளியே அமைக்கப்படலாம்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெளியூர்க்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற உத்தரவு
Published on: 

சென்னை,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்

தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் போன்றவற்றின் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

இன்று மாலை 6 மணிக்கு மேல்...

தொகுதி வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அந்த தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் போன்ற இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செயல் திறனற்றதாகி விடும். சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு அளிக்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்கான சட்டமன்றதொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

முறைகேடான செயல்

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்து செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133-ம் பிரி வின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் தாராபுரம் தொகுதியில் இருந்து வெளியூர்க்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியும், திருப்பூர் மாவட்ட கலெக்டருமான மனிஷ் நாரணவரே உத்தரவு பிறப்பித்துள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com