

சென்னை,
கே.என்.நேருவின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவி என்ஜினீயர்கள், இளநிலை என்ஜினீயர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக டி.ஜி.பி.க்கு. மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கே.என்.நேருவின் சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ். ஆர்.நாராயணன், தியாகராஜன் செல்வமணி ஆகியோர், பிப்ரவரி 20-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி, நேருவின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.