மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்து உள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது
Published on

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 533 காளைகள் வந்தன. இவற்றில் 475 காளைகள் போட்டியில் பங்கேற்றன. 150 காளைகள், வீரர்களிடம் பிடிபட்டன. 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று 2வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன.

இந்த நிலையில், இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் சுமார் 1,400 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை எஸ்.பி. தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 15 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த போட்டியின் சிறந்த வீரராக ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டு பரிசாக கார் வழங்கப்பட்டது. 10 காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 2வது பரிசும், 9 காளைகளை பிடித்த அஜய்க்கு 3வது பரிசும் வழங்கப்பட்டது. இதேபோன்று பரம்புப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com