கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: கரையோரம் இருந்து தரிசிக்க பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: கரையோரம் இருந்து தரிசிக்க பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

இதையடுத்து 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன. திருவிழாவின் நிறைவையொட்டி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார். வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் நாளை ( 16-ந் தேதி) அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

இந்த நிகழ்வைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்து வருகின்றனர். இதனிடையே வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை, ஆற்றங்கரையோரம் இருந்து தரிசிக்க வேண்டும் எனவும் பக்தர்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com