மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்

மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(செப்டம்பர் 17-ந்தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com