மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து 870 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில், 461 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.
மது அருந்தியது, எடை குறைவு, எடை அதிகம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட காரணங்களால் 24 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இறுதிச்சுற்றில் மட்டும் 61 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி, தங்க நாணயங்கள், டி.வி., சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






