

மதுரை,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் 164 ஆண்டுகளுக்கு முன்பே தீபம் ஏற்ற முயற்சி மேற்கொள்ளபட்டு, தற்போது அது வெற்றி அடைந்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றைக்கு நெய் தீபம் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த தூண் தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டதா? அல்லது நில அளவை குறிக்கும் வகையில் நிறுத்தப்பட்டதா? என்ற கேள்வி நூற்றாண்டுகளை கடந்தும் எழுந்து கொண்டே இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கல்தூண் குறித்து வரலாற்றில் இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன.
அரசு தரப்பில் உள்ள தொல்லியல் துறையும், நில அளவைத் துறையும், "இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தூண் அல்ல. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கோணவியல் நில அளவைக்காக நடப்பட்ட கல்" என்று கூறுகிறது. ஆனாலும், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே 1862 மற்றும் 1912-ம் ஆண்டுகளில் இங்கு தீபம் ஏற்ற முயற்சி செய்து, தடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், 1920-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, கோவில் நிலம் எதுவரை உள்ளது? என்ற பிரச்சினை அப்போது இருந்து வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந்தேதி முடிவடைந்தபோது, மதுரை சப்-கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள இடம், கொடிக்கம்பம், படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய குறிப்பிட்ட பகுதிகளை தவிர, மலையின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 1931-ம் ஆண்டு பிரைவி கவுன்சில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லண்டன் பிரைவி கவுன்சில், 1931-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், 1923-ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
இப்படி இருந்து வந்த நிலப்பிரச்சினைக்கு மத்தியில், 1996-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தர்காவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சுமார் 150 ஆண்டுகளாக அங்குள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இவ்வாறு நூற்றாண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்த நிலையில், கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம், திருப்பங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வும் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் தர்கா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு கடந்த 20-ந்தேதி அன்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ந்தேதி, தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருமுறை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இது யாருக்கும் நிரந்தர உரிமையையோ அல்லது வழிபாட்டு மரபையோ உருவாக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று (நவ. 27) முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.
அதாவது, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த தவறியதாக கூறி, கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததுடன், கோவில் நிர்வாகத்தை கவனிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமித்தது. சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வளையத்திற்குள் திருப்பங்குன்றம் மலை கொண்டு வரப்பட்ட நிலையில், அங்குள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதன் மூலம் 164 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தொடர் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது.