

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத். தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுத்தேர்தலின் போது நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16-ந்தேதி முடிவடைகிறது. இதுவரையில் முக்கிய கட்சிகள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (விநாயகர் சதுர்த்தி) விடுமுறை நாட்களாகும். எனவே வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய் மற்றும் புதன் கிழமை மட்டுமே உள்ளது. கடைசி நாளான புதன்கிழமை அன்று த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்க உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.