திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா: 76 ஓம குண்டங்களில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது

இந்த யாகசாலை பூஜையில் மொத்தம் 700 கும்பங்களில் புனிதநீர் சேகரிக்கப்படுகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 76 ஓம குண்டங்களில் யாகசாலை பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 700 கும்பங்களில் புனிதநீர் சேகரித்து பூஜைகள் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கடந்த 27-ந்தேதி கணபதி பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலையில் மூலவர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு தானிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, திருக்குட வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கிறது. மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோவில் உள்பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
அதேபோல் சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பூஜை தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை, குமரவிடங்கபெருமான், ஆத்மநாதர் பஞ்சலிங்கம், நடராஜர் உள்ளிட்ட கும்பங்களுக்கு வாசனை திரவியங்களைக் கொண்டு வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு, காசி, ராமேஸ்வரம், காவிரி, தாமிரபரணி, திருச்செந்தூர் கடல், நாழிக்கிணறு உள்ளிட்ட தீர்த்தம் சேகரித்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு திருமண் எடுத்தல், முளைப்பாரியிடுதல், குருநிலை போற்றுதல், காப்பு கட்டுதல், இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்தல், பின்னர் ராஜகோபுரம் அடிவாரத்தில் பிரமாண்டமாக தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.
சுவாமி சண்முகருக்கு 49 ஓம குண்டங்களும், சுவாமி ஜெயந்திநாதருக்கு 5 ஓம குண்டங்களும், சுவாமி நடராஜருக்கு 5 ஓம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 12 ஓம குண்டங்களும் என 71 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் அருகில் பெருமாளுக்கு தனியாக 5 ஓம குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் ராஜகோபுர அடிவாரத்தில் பிரதான கும்பங்களான 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் இந்த யாகசாலை பூஜையில் மொத்தம் 700 கும்பங்களில் புனிதநீர் சேகரிக்கப்படுகிறது. யாகசாலையில் 96 வகை மூலிகைகளைக் கொண்டு பூஜை நடைபெறுகிறது. சுவாமி சண்முகருக்கு நடைபெற உள்ள யாகசாலை பூஜையில் 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர். அதேபோல் ராஜகோபுரம் அடிவாரத்தில் சுவாமி பெருமாளுக்கு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பட்டாச்சாரியார்கள் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து 7-ந் தேதி வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
வருகிற 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்த பின்னர் காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.






