

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் முக்கியமானதாகும். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த 10 முதல் 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்த தற்காலிக ஆசிரியர்களில் 80 விழுக்காட்டினர் முனைவர் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள். தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி.
ஆனால், 10 முதல் 14 ஆண்டுகளாக இதே பணியில் தொடரும் இவர்களின் பணி ஒப்பந்தத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை முறித்துக் கொண்டு, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களைப் போன்று கணக்குக் காட்டி, பணி நிலைப்பு வழங்க மறுத்து வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். பணி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதமே எனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் பணி நீட்டிப்பு ஆணை வழங்காமல், கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைத்த செயல் இவர்களின் இத்தனை ஆண்டுகால உழைப்பை உதாசீனப்படுத்துவதாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இவர்கள் தங்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில் 2020-ல் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பல்கலைக்கழகத்தால் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரப் படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதே தீர்ப்பினை கடந்த ஏப்ரல் மாதம் நீதியரசர்கள் அனிதா சுமந்தன், அருள் முருகன் தலைமையிலான அமர்வும் உறுதி செய்தது. இதிலும் மேல்முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்ற தீர்ப்பினை உறுதி செய்தது. ஆனால் எந்த நீதிமன்ற தீர்ப்புகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்தாமல் அலட்சியமாகவும், ஆணவமாகவும் நடந்து வருகிறது. உயர்கல்வி துறையும், தமிழக அரசும் இதனை கண்டும் காணாமல் இருக்கிறது.
இதற்கிடையில், கடந்த 06.02.2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மீண்டும் நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ், " தற்காலிகமாக உதவி பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது, ஒரு குடும்பம் உள்ளது, அவர்களை ஒரு வெற்று காகிதமாக பயன்படுத்தி தூக்கி எரியாதீர்கள். இது பாவம்" எனக் குறிப்பிட்டு, தற்காலிக உதவி பேராசிரியர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பின்பு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்புகை கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளிலும் 950-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள போதும் உயர்கல்வித்துறை அதிகாரிகளின் அதிகார போட்டியால் கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த 16.2.2026 முதல் உறுப்பு கல்லூரிகளின் வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம், கவன ஈர்ப்பு போராட்டம், பல்கலைக்கழக முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் அவர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, 328 தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதுடன் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதித்து, ஊதியத்தை உயர்த்தி பணிநிலைப்பு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.