

திசையன்விளை,
போதை வாலிபரிடம் ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய முதியவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மாயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (வயது 25). இவர் நேற்று அம்பலம் டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ஏற்கனவே டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த மூலைக்கரைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி (வயது 63) என்பவர் லிப்ட் கேட்டு முத்துகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.
அம்பலம் மெயின் ரோட்டில் வந்தபோது போதையில் தள்ளாடிய முத்துகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவரது பின்னால் அமர்ந்திருந்த முனியாண்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முத்துகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.