“கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலி..”: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்னென்ன.? வனத்துறை விளக்கம்

சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு, அந்த புலிய மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“கூண்டில் சிக்கியது ஆட்கொல்லி புலி..”: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்னென்ன.? வனத்துறை விளக்கம்
Published on

கூடலூர்,

கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில் ஆட்கொல்லி புலி பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மனித-விலங்கு மோதல்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலளாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக்காப்பாளர் அவர்களால் கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலியைப் பிடிப்பதற்கான உரிய உத்தரவுகள் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு, 21-08-2026 அன்று புலியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

305 கண்காணிப்புக் கேமராக்கள்

அதன் அடிப்படையில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை மருத்துவர்கள், விரைவு மீட்புக் குழு கொண்ட 105 வனப் பணியாளர்கள் இப்பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக் கண்காணிப்பாளர்களும் (Tiger Trackers), வன கால்நடை மருத்துவர்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சந்தேகிக்கப்படும் புலியைப் பிடிப்பதற்காக 305 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் (thermal drones) இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சந்தேகிக்கப்படும் புலியின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நேற்று அதிகாலை

குறிப்பாக வனத்துறை அமைச்சர் அவர்கள் 11.09.2026 அன்று நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இப்பணியானது முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் 28 நாட்களாக எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், புலியைப் பிடிப்பதற்காக கூடலூர் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் (18.09.2026) அன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் புலியானது சிக்கியது.

வண்டலூர்

புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பிடிப்பட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருப்பதாலும் அதன் சிங்கபற்கள் தேய்மானம் அடைந்திருப்பதாலும் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com