

கடந்த 11.4.2025 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலில், கங்காதேவி என்ற பெண் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குச் செல்வதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில் ஏறியுள்ளார். ரெயில் நிலையத்தில் நிலவிய கடும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் கங்காதேவியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தாலிச் செயினை நைசாகப் பறித்துச் சென்றுள்ளார்.
ரெயில் கோவில்பட்டி நிலையத்தை அடைந்தபோது, தனது கழுத்தில் இருந்த நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கங்காதேவி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து அவர் உடனடியாக தூத்துக்குடி இருப்புப் பாதை (ரெயில்வே) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூத்துக்குடி முள்ளக்காடு, ராஜீவ்நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மகன் மதுரைவீரன் (வயது 20) என்பவர் நகையைப் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 6 சவரன் தங்க நகையை மீட்டனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி ஜே.எம். 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பாக்கியராஜ், குற்றம் சாட்டப்பட்ட மதுரைவீரன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.