

சென்னை,
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ரூ.37 லட்சம் நில மோசடி வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை தற்போது கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி கார்டன் காமராஜ் அவென்யு பகுதியில் பிலோமினாராணி என்ற பெண்ணுக்கு சொந்தமான 6,772 சதுரடி இடத்தை லீமாராஜ் என்பவர் போலி வாரிசு சான்று மூலம் அபகரித்தார். பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஹரிநாராயணன் என்பவருடன் இணைந்து அந்த நிலத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார்.
இந்த மோசடி சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு அரங்கேறியது. இதுகுறித்து பிலோமினாராணி அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லீமாராஜ், ஹரிநாராயணன் ஆகிய 2 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு ஹரிநாராயணன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே அவருக்கு எதிராக பிடிவாரண்டு உத்தரவை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஹரிநாராயணன் (வயது 60) கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர், எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஹரிநாராயணனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.