

சென்னை,
சென்னை அண்ணாநகரில் உள்ள நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சமீர் மனாட் தாழம் (வயது 39). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நகை கடையில் இருந்த நகைகளை கணக்கு பார்த்தபோது வாடிக்கையாளர்களின் பழைய தங்க நகைகளை பழுது பார்த்து கொடுக்கும் பிரிவில் 37 சவரன் தங்க நகைகள் குறைந்து இருந்தது. அந்த பிரிவில் பணிபுரியும் மேலாளர் ராஜேஷ் மீது சந்தேகம் இருப்பதால் அவரிடம் விசாரித்து நகைகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்(27) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், வாடிக்கையாளர்களின் 37 சவரன் பழைய நகைகளை திருடிச்சென்று, அவற்றை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. ராஜேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.