

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வுபெற்ற விடுதி வார்டன் ஒருவர், வீட்டில் புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வசந்த மல்லிகா, அரசு விடுதி வார்டனாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், இன்று (வியாழக்கிழமை) பகல் நேரத்தில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். தனிமையில் இருந்த வசந்த மல்லிகாவைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்த கும்பல், அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளது.
இந்த துணிகரக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அபிஷேக் குப்தா சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தடைய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்த முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வசந்த மல்லிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.