

மதுரை,
மண்டல பூஜை நிறைவுபெற்றதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். முதல் முறையாக நாள் முழுவதும் சன்னதி அடைக்காமல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 17-ந்தேதி வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தன்று சுவாமியை காண முடியாதவர்கள் மண்டலாபிஷேக காலக்கட்டத்தில் சுவாமியை தரிசனம் செய்தால் கும்பாபிஷேகத்தை பார்த்த பலன்களை பெறுவார்கள் என கூறுவது உண்டு. எனவே கும்பாபிஷேகம் முடிந்து மறுநாள் 18-ந்தேதி யில் இருந்து மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி (நேற்று) நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் தொடங்கின. சுவாமி சன்னதி, நவக்கிரக சன்னதி அருகே யாகம் வளர்த்து 4 பிரதான கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜைகள் தொடங்கியது. நேற்று 2 கால பூஜை முடிந்து காலை 9.30 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 பிரதான கலசங்கள் மற்றும் அம்மன், சுவாமிக்கு என தனித்தனியாக 108 கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து வலம் வந்தனர்.
பின்னர் உச்சிகால பூஜையில் 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் செய்து மண்டல பூஜை நிறைவு பெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி கோவில் திறப்பதற்கு முன்பு நேற்று அதிகாலை 3 மணிக்கே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிக அளவில் கூடியது. கோவில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. இதனால் அதிகாலை முதல் இரவு வரை கோவிலில் சுவாமி, அம்மன் சன்னதி கதவுகள் மூடப்படவில்லை. சித்திரை வீதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் அதிகாலையில் இருந்து இரவு வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக காலை 11 மணிக்கு மேல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றில் மதியம் சன்னதி அடைக்காமல் பக்தர்களின் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது இதுதான் முதல் முறை எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
அதேபோல் தொடர் விடுமுறை காரணமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.