

கோவை,
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விரைவில் தேர்தல் என மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போதுதான் தெரியவருகிறது. ஆட்சி மாற்றம் என ஸ்டாலின் பேசியதன் வெளிப்பாடுதான் எம்.எல்.ஏ பேரம் என தெரிய வருகிறது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறது. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது சகஜன் தான். கோடிகளை கொடுத்து வாங்குவது சரியல்ல.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்துதான் குதிரை பேரம், கழுதை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக உட்கட்சி பூசலால்தான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆட்சிக்கு என தனியே ஆதரவளித்ததாக தெரியவில்லை. அமைச்சரின் தனிப்பட்ட நடவடிக்கை என்பது வேறு, அரசின் நடவடிக்கை என்பது வேறு.
எம்.எல்.ஏக்கள் தாமாகவே முன்வருவதாக கூறினர். அவர்களை சேர்த்து ஏன் ஊக்கம் கொடுக்க வேண்டும் என கேட்டோம். 4 எம்.எல்.ஏக்கள் தவெகவில் சேர்த்தபோதே இதை ஊக்குவிக்க வேண்டாம் என கூறினோம்.
திமுக உடன் இருக்கும்போது ஒரு மாதிரியும் விலகினால் வேறு மாதிரியும் அவர்கள் அணுகுமுறை இருக்கும்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.